நானும் அவளிடம் பேச நினைத்து தொடங்குவேன்... ஏதோ காரணமாக முடியாமல் போகும். இப்படியே ஒரு வாரம் கழிந்தது...
அன்று திங்கட் கிழமை என நினைக்கிறேன். வைரஸ் காய்ச்சலின் காரணமாக நான் பள்ளிக்கு 'கட்' அடித்துவிட்டு டி.வீ.யில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஏதேச்சையாக வெளியே வரும் போது என் தேவதையைக் கண்டேன். அவளும் ஏதோ காரணம் சொல்லி பள்ளிக்கு செல்லவில்லை போலும். அதான் சாக்காக வைத்து அவளிடமே கேட்டேன்
'ஹலோ, என்ன... இன்னைக்கு நீங்களும் மட்டமா?'
சில நொடி...சிந்தனைக்குப் பின்... 'ஆமாங்க.. காய்ச்சல்'
'எனக்கும் தான். ஏன்னு தெரியல நாம ரெண்டு பேருக்குமே ஒரே நேரத்துல காய்ச்சல்... ஹிஹி' - நானே தான்!
காதில் வாங்கினாலோ இல்லையோ... விருட்டென சென்றுவிட்டாள்!
----
ம்ம்ம்ம் ஐடியா... பேசாமல் லவ் லெட்டர் எழுதிக் கொடுத்தால் என்ன... என் உள்மனம் கூறியது.
மொட்டை மாடிக்கு உடனே பறந்தேன்.
எழுதினேன்... எழுதினேன்... நிறைய எழுதிப் பார்த்தேன். ஒன்னும் சரியாகப் படவில்லை.
முடிவில்...
நானும் உன் மதம் தானே (அவளின் பெயர்)
உனக்கு என்னைத் தர சம்மதமா?
' நச்'ன்னு ரெண்டே வரியில் எழுதி.... மறக்காமல் என் பெயரை எழுதாமல் மடித்து வைத்துக் கொண்டேன்.
கொடுக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். வெளியே வந்தது தேவதை.
நன்றாக விளக்கி வைத்த வெண்கல சிலையென, அந்த அழகான சின்னக் கண்களில் மையிட்டு, குவிந்த புருவங்களுக்கு நடுவே புள்ளி வைத்தார்போன்ற பொட்டு... -தேவதை.
ஏனோ தெரியவில்லை, அந்த நேரத்தில் எதைப் பற்றியும் நினைக்கத் தோன்றாமல் அப்படி ஒரு தைரியம் என்னுள் எப்படி வந்ததோ தெரியாமல் நேரடியாக அவளிடம் சென்று கடித்தத்தை தந்தேன்... வந்தேன்.
பின் தான் என்ன பின் விளைவுகள் வரும் எனத் தெரியாமல் மனம் பதைக்க பதைக்க இருந்தேன். அடுத்த நாள்...அடுத்த நாள். ஒன்றும் நடக்கவில்லை. அவளின் வீட்டிலும் யாரும் இருக்கவில்லை. அவளையும் காணமுடியவில்லை.
அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போனது அப்போது தான் எனக்குத் தெரிந்தது.
மனது வலித்தது. அவளுக்கும் வலித்திருக்குமோ...பின்பு ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல்.... கொள்ளாமல் (ஆனால் என் இதயத்தைக் கொன்றுவிட்டு) சென்றேவிட்டாள்??!!
வெள்ளி, பிப்ரவரி 09, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக